40 எம்எல்ஏக்களின் உடல்கள் நேராக போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பப்படும்… சஞ்சய் ராவத் பரபரப்பு கருத்து!!
கவுகாத்தியில் இருந்து 40 எம்எல்ஏக்களின் உடல்கள் நேரடியாக பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பப்படும் என்று சிவசேனா செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணிக்கு எதிராகவும், முதலமைச்சரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்ரேவுக்கு எதிராகவும் அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 35க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் அசாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் கவுகாத்தியில் இருந்து 40 எம்எல்ஏக்களின் உடல்கள் நேரடியாக பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பப்படும் என்று சிவசேனா செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், பாலாசாகேப் தாக்கரேவைக் காட்டிக் கொடுத்தவன் முடிந்தான். ஒரு தந்தைக்கு பிறந்திருந்தால் 40 பேரும் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலுக்கு செல்லுங்கள். சிவசேனாவுக்கு கலகம் புதிதல்ல.
சந்தீபன் பூமாரே ஒரு வாட்ச்மேன், அவருக்கு மும்பை தெரியாது. இன்று அவர் அமைச்சராகப் பதவியேற்றார். கவுகாத்தி ஹோட்டல் தான் பிக்பாஸ் இல்லம். போட்டோக்களை பார்க்கும் போது Radisson Blu ஹோட்டல் போல் இல்லை, பிக்பாஸ் வீடு போல் தெரிகிறது. மக்கள் குடிக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள், விளையாடுகிறார்கள். மேலும் பாதி பேர் எலிமினேட் ஆகிவிடுவார்கள்... எப்போது வரை கவுகாத்தியில் பதுங்கி இருப்பீர்கள், மீண்டும் சௌப்பட்டிக்கு வர வேண்டும். மகாராஷ்டிராவின் உண்மையான பெரிய முதலாளிகள் பாலாசாகேப் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே. மேலும் இதை ஒரு நெருக்கடியாக நான் கருதவில்லை.
சிவசேனாவை வலிமையுடன் முன்னெடுத்துச் செல்வோம். இனிமேல் யாரை நம்புவது, யாருடைய பல்லக்கை எடுத்துச் செல்வது என்பதை முடிவு செய்ய வேண்டும். பிரகாஷ் சர்வே மீண்டும் சட்டசபைக்கு வரமாட்டார். 40 எம்எல்ஏக்களின் உடல்கள் கவுகாத்தியில் இருந்து பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அங்கு இருக்கும் 40 பேர் உயிருடன் பிணமாக உள்ளனர். அவர்களின் உடல்கள் மட்டுமே இங்கு திரும்பி வரும், அங்கு ஆன்மா இறந்திருக்கும். இந்த 40 பேரும் இங்கிருந்து வெளியேறும் போது, அவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள். இங்கே கொளுத்தப்பட்ட நெருப்பில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். மகாராஷ்டிராவை 3 பகுதிகளாக பிரிக்க நினைக்கிறார்கள். அப்படி நடக்க விடமாட்டோம் என்று தெரிவித்தார்.