sangiliyana controversial speech about sexual harassment

பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால் பெண்கள் சரணடைந்து விடுங்கள் என கர்நாடகாவின் முன்னாள் போலீஸ் டிஜிபி சங்கிலியானா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமுதாயத்தில் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில், டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவிக்கு, அவர் ஆற்றிய பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது. அதேபோல, பரப்பன அக்ரஹார சிறை அதிகாரியாக இருந்த ரூபாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக காவல்துறை முன்னாள் டிஜிபி சங்கிலியானா, ஆஷா தேவியின் உடலமைப்பே இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கிறது. அப்படியென்றால் அவரது மகள் நிர்பயா எப்படி இருந்திருப்பார்? என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதுமட்டுமல்லாது, பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால், அவர்களிடம் சண்டையிடாமல் பெண்கள் சரணடைந்து விடுங்கள். அப்படி செய்தால், உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம். அதன்பின்னர் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சங்கிலியானா பேசியிருப்பது பெண்களிடையேயும் மாதர் சங்கத்தினரிடையேயும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.