சைஃப் அலிகானை தாக்கிவிட்டு செல்போன் கடைக்குச் சென்ற குற்றவாளி! புதிய சிசிடிவி காட்சி வெளியீடு!
Saif Ali Khan attack: சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்தியவர் ஒரு மொபைல் கடையிலிருந்து ஹெட்ஃபோன்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. சைஃப் தாக்குதலுக்குள்ளான பிறகு வெளியாகியுள்ள நான்காவது சிசிடிவி காட்சி இதுவாகும்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானைத் தாக்கிய நபர் கத்திக்குத்து சம்பவத்திற்குப் பிறகு "இக்ரா" என்ற மொபைல் கடைக்குச் சென்று ஹெட்ஃபோன்களை வாங்கியுள்ளார். அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை மும்பை போலீசார் வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் நடந்து சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, காலை 9 மணியளவில் பதிவாகியுள்ள சிசிடிவி வீடியோவில், தாக்குதல் நடத்தியவர் நீல நிற சட்டையில் ஒரு பையுடன் இருப்பதைக் காண முடிகிறது.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அந்தக் கடைக்காரர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார். "அவர் எனக்கு ரூ.100 கொடுத்தார். நான் அவருக்கு ரூ.50 திருப்பிக் கொடுத்தேன். அவர் கடையை விட்டு வெளியேறினார். சில போலீஸ் அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) கடைக்கு வந்து சிசிடிவி காட்சிகளை எடுத்துச் சென்றனர். அவர்கள் அந்த நபரைப் பற்றி விசாரித்தனர். அவர் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியாது" என்று அவர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் ரூ.25 லட்சம் பணிக்கொடை பெறுவது எப்படி?
வியாழக்கிழமை அதிகாலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் சைஃப் அலி கான் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், நான்காவது சிசிடிவி காட்சி வெளிவந்துள்ளது.
முன்னதாக, சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டின் கட்டிடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் வெளிவந்தன. அதிகாலை 1:38 மணியளவில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் படிக்கட்டுகளில் ஏறிச்செல்லும் காட்சி அந்த வீடியோவில் காணப்பட்டது. அவரது முகம் ஒரு துணியால் மூடப்பட்டிருந்தாலும், அவர் ஒரு பையை எடுத்துச் செல்வது தெரிந்தது.
தாக்குதலில் சைஃப் அலி கானுக்கு முதுகெலும்புக்கு அருகில் ஆறு காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவமனையின் அறிக்கையில், சைஃப் அலி கான் நன்றாக குணமடைந்து வருவதாகவும், அவரால் நடக்க முடிகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
வங்கிக் கணக்குகள், லாக்கர் வசதியை பயன்படுத்த புதிய விதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு