ரூ.4 கோடி நிதியை ஈட்டித்தந்த சத்குரு வரைந்த ஓவியம்..! கொரோனா நிவாரண பணிகளுக்கு செலவு
ஈஷாவின் கொரோனா நிவராணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
கொரோனா பிரச்சினையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று உணவும், நிலவேம்பு கசாயமும் தினமும் வழங்கப்படுகிறது. இந்த சவாலான பணியில் சுமார் 700 தன்னார்வலர்கள் ஈடுப்பட்டுள்ளனர். குறிப்பாக, அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தினக் கூலி தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், மலைவாழ் பழங்குடி மக்கள், ஆதரவற்ற முதியவர்களின் நலனில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இதேபோல், கொரோனா தடுப்பு பணியில் தங்கள் உயிரை பணையம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து தருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய இந்தப் பணிகள் ஊரடங்கு முடந்த பிறகும் மக்கள் பொருளாதார ரீதியாக தங்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பும் வரை தொடர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்த நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள், ‘முழுமையாக வாழ’ (To Live Totally) என்ற தலைப்பில் 5 க்கு 5 அடி அளவில் ஒரு வடிவமற்ற ஓவியத்தை (Abstract painting) வரைந்தார். அந்த ஓவியம் சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஏப்ரல் 30-ம் தேதி (நேற்று இரவுடன்) நிறைவு அடைந்த ஏலத்தின் முடிவில் ஒருவர் அந்த ஓவியத்தை ரூ.4 கோடியே 14 லட்சத்துக்கு வாங்க சம்மதித்துள்ளார்.
இது தொடர்பாக சத்குரு கூறுகையில், “இது கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட நிதி. எனது ஓவியத்திற்கான விலை அல்ல. சமுதாயத்தில் வாழும் ஏழைகளின் நலனுக்காக அரசும், அரசு நிர்வாகமும் அதிகம் செயல் செய்து வருகின்றன. இருப்பினும், அதில் இன்னும் சில விரிசல்கள் விழலாம். எனவே, இந்த சவாலான சூழலில் யாரும் பசியால் தவிக்காமல் பார்த்து கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்பு”என தெரிவித்துள்ளார்.
ஈஷா அமைந்துள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் கொரோனா வராமல் தடுக்கும் விதமாக #BeattheVirus என்ற பெயரில் நிவாரணப் பணிகளையும், விழிப்புணர்வு களப் பிரச்சாரத்தையும் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இதன்பயனாக, இப்பகுதியில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.