சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட எம்.பி. பதவி, மக்களுக்கு சேவை செய்யவே கொடுக்கப்பட்டது என்றும் அவரால் இந்த பணியை செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்து விடலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், ரன்கள் எடுப்பதில் சாதனை படைத்திருந்தாலும், ஒரு எம்.பி. ஆக மோசமான ஸ்கோரை பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர், கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை வெறும் 24 முறை மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு இதுவரை சுமார் ரூ.60 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் வாங்கும் சம்பளத்துக்கு சேவை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு தரும் கௌரவ பதவி போன்றது இல்லை இந்த எம்.பி. பதவி என்றும், மக்களுக்கு சேவை செய்யவே கொடுக்கப்பட்டது என்றும், அவரால் இந்த பணியை செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்து விடலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.