பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கடந்த மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.
பாரா ஒலிம்பிக்கின் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்க பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து அவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிய தொடங்கின.

இந்நிலையில், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் உள்பட பதக்கம் வென்ற மற்ற வீரர்களுக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கிரிக்கெட் பிரபலம் சச்சின் தெண்டுல்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்தியாவை பெருமைப்படுத்திய இந்த வீரர்கள் குறித்து பெருமை கொள்வதாக சச்சின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாரியப்பன், நான் சிறுவனாக இருந்தபோது என்னை விளையாட கூட சேர்த்து கொள்ள மாட்டார்கள். அப்போது தான் நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
ரியோவில் பதக்கம் வென்ற பிறகு அங்கு நமது தேசிய கொடி ஏற்றப்பட்டபோது எனது கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேசத்திற்காக சாதித்த பெருமை எனகுள் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
மாரியப்பனின் இந்த பேச்சால் சச்சின் உள்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கண் கலங்கியதால் அரங்கமே சோகத்தில் ஆழ்ந்தது.
