சபரிமலையில் கடந்த வாரம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என பக்தர்கள் நடத்திய போராட்டத்தின் போது திரும்பிய பக்கமெல்லாம் நம் அனைவரின் கண்களில் பட்டவர் ஐஜி ஸ்ரீஜித்தான்.

போராட்டம் நடத்தும் பக்தர்களை சமாதானப்படுத்துவது, கோவிலுக்குள் நுழைய முயலும் இளம் பெண்களை சமாளிப்பது, பத்திரிக்கையாளர்களிடம், நிதானமாக பேசி தகவல் சொல்லுவது, உயர் அதிகாரிகளின் கட்டளைகளை செயல்படுத்துவது என சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஐஜி ஸ்ரீஜித்தான். மொட்டைத் தலையுடன் ஓடி ஓடி பணியாற்றிய அவர் நேற்று நடந்த படி பூஜையில் பங்கேற்றறு நெஞ்சம் உருக பிரார்த்தனை செய்தார்.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில்  தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.

அது முதல் ஐயப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள், பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரச்சனைகளை சமாளிப்பதற்காக ஸ்ரீஜித் என்ற ஐஜி  சபரிமலைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். சென்சிட்டிவான அந்த நேரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அமைதியை நிலை நாட்டினார். பத்திரிக்கையாளர் கவிதா, பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோர் சபரிமலை வந்த அன்று, அவர்களை , ஐஜி ஸ்ரீஜித் 18ம் படி லிருந்து 500 மீட்டர் தூரம் வரை அழைத்துச் சென்றார். ஆனால் பக்தர்கள் எதிர்ப்பு வலுக்கவே இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி பெண்களை திருப்பி அனுப்பி வைத்தார்.

அப்போது அவர் செயல்பட்டவிதம் அனைவரையும் கவர்ந்து. இந்நிலையில் இன்று சபரிமலை நடை சாத்தப்படுகிறது. இதையொட்டி நடந்த படி பூஜையில் ஸ்ரீஜித் ஐஜி கலந்து கொண்டு கண்ணீர் மல்க ஐயப்பனை வேண்டிக் கொள்ளும் படம் வைரலாகி வருகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு புறம், பக்தர்கள் எதிர்ப்பு மறுபுறம் என இரு தலைக் கொள்ளி எறும்பு போல் தவித்த அவரின் கடமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.