கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில்  தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.

அதுமுதல் ஐயப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள், பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் கடந்த 19-ந் தேதி சபரிமலைக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, 18-ம் படி அருகே வைத்து அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பி சென்றனர்.இதே போன்று நேற்றும் சபரிமலைக்கு வந்த 6 பெண்களை பக்தர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று நடை அடைக்கப்படுகிறது. இதற்காக அய்யப்பன் கோயில் சன்னிதானத்தின் நடை  இன்று அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக 18 படிகளில் சிறப்பு படிபூஜை நடைபெற்றது.

சபரிமலையில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் மோதல் காரணமாக சபரிமலை வட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இன்று வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே சபரிமலை, நிலக்கல் போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ள ஊடங்கள், ob  வேன்கள், அங்கு தங்கியுள்ள செய்தியாளர்கள் உடனடியாக அந்த இடத்தைவிட்டு காலி செய்யும்படி போலீஸ் உத்தரவிட்டுள்ளது,