சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மறு சீராய்வு மனுவை, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 3 பேர் பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்ந்து வருகிறது. சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த ஐதீகத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து வயது பெண்களும், எந்தப் பாகுபாடு இல்லாமலும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயன்றது. ஆனால், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்தாண்டு மண்டல கால பூஜையின்போது, சபரிமலைக்கு செல்வதற்கு பல பெண்கள் முயன்றனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் பிரச்னையால், பல இடங்களில் வன்முறையும் நடந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம், 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இவற்றை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் ஆர்.எப்.நரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 

அதில், பெண்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது சபரிமலையில் மட்டும் அல்ல வேறு கோயில்கள் மசூதிகளிலும் உள்ளது. மதம் சாரந்நத நம்பிக்கை தொடர்பான வாதங்களை கருத்தில் கொண்டோம். தீர்ப்பு இந்து பெண்களுக்கு மட்டும் என வரையறுத்து விட முடியாது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உள்ளது.  இந்த மறுசீராய்வு மனுவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். பெரிய அமர்வுக்கு மாற்ற ரஞ்சன் கோகோய், கன்வில்கர், மல்ஹோத்ரா பரிந்துரை செய்தனர். நாரிமன், சந்திரசூட் ஆகியோர் எதிரான தீர்ப்பை வழங்கினர். 7 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் வரை மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.