அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் ஒரே ஒரு உத்தரவுதான் கேரளாவில் தீயாய் பற்றிக் கொண்டது. இந்த உத்தரவால் கேரளம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் ஐயப்ப பக்தர்கள் கொந்தளித்தே போனார்கள். மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அறிவித்து விட்டது கேரள கம்யூனிஸ்ட் அரசு. 

இதனால் ஆடிப்போன சபரிமலை ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், திருவிதாங்கூர் சமஸ்தானம், ஐயப்பன் கோயில் முக்கிய நிர்வாகியான தந்திரி உள்ளிட்ட பலரும் ஒன்று கூடி தமிழகத்தின் ஜல்லிக்கட்டைப்போல உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாபெரும் போராட்டத்தைக் கையிலெடுக்க முடிவெடுத்தனர். அதன்படி, கொல்லம், கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் அணி திரண்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

ஆனால். அசரவில்லை மாநில அரசும் - மத்திய அரசும். ஜல்லிக்கட்டைப் போன்று சட்டவிதிகளைத் தளர்த்தி ஏதாவது உதவி செய்வார்களா என மத்திய அரசிடம் இருந்தும் மாநில அரசிடம் இருந்தும் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில்தான், இந்த வருடத்தின் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்ட தென் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் பலர், சபரிமலைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களோடு சபரிமலைக்கு போயே தீர வேண்டும் என நீண்டநாள் கணவோடும், ஆசையோடும் இருந்த பெண்கள் பலரும் விரதம் இருந்தும் சபரிமலையைக் நோக்கி நடையைக் கட்டினர்.

ஆனால், நேற்று இரவு முதலே சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண் - பெண் பக்தர்கள்  திரண்டு விட்டனர். இன்று காலை ஒவ்வொரு கார், வேன், ஜீப் ஒன்று விடாமல் போலீசை ஒருபடி மேலே போய் சல்லடைப்போட்டு சலிக்கத் தொடங்கி விட்டனர் ஐயப்ப பக்தர்கள். யாரேனும் பெண்கள் தவறிக்கூட மலைமீது ஏறிவிடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். இந்த நிலையில், பதற்றம் நேரம் ஆக ஆக அதிகமாகிக் கொண்டே சென்றது. அதையும் மீறி ஆந்திராவைச் சேர்ந்த சில வீரமங்கைகள் முன்னேறி சென்றனர்.

  

அதில் மாதவி என்ற பெண் ஒரே நாளில் பிரபலமாகி விட்டார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களாலும் செல்ல முடியாமல் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மாதவி உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்ற பெண்கள், முன்னேறி வரும்போது, வழிநெடுகிலும் கூடியிருந்த லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், அந்த பெண்களின் கால்களில் நேரடியாக விழுந்து வணங்கி மேலே செல்ல வேண்டாம்... 

சபரி மலை புனிதத்தை காப்பாற்றுங்கள்...! என்று கெஞ்சி வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான... ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வேலையில் ஈடுபட்டதால், மலையேறும் ஆர்வத்தில் வந்த பல பெண்கள் மனமிறங்கியும், மனம் மாறியும் வந்த வழியே நடையைக் கட்டினர். பெண்கள் வருவதும், ஆண்கள் அவர்களது காலில் விழுந்து கெஞ்சுவதுமான நிகழ்வுகள் சபரிமலை அடிவாரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பரபரப்பு நிலவுகிறது.