சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் சபரிமலை கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பம்பை அடிவாரத்தில் குழுமியுள்ளனர். 

ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சபரிமலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சபரிமலை நோக்கி வரும் பெண்களை, பக்தர்கள் சிலர் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். சபரிமலைக்கு வரும் வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டு, பக்தர்களால் சோதிக்கப்பட்டு பெண்கள் யாராவது இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பை பகுதிகளில் திரண்டுள்ளனர். அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு எதிராக நிலக்கல் மற்றும் பம்பையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நிலக்கல்லில் பல்வேறு அமைப்புகள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளனர். அப்போது அவர்கள் அங்கு கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் ஐயப்பன் பக்தி பாடல்களைப் பாடியவாறு தங்களது போராட்டத்தை நடத்துகின்றனர். 

இதேபோல் பம்பை பகுதியில் ஏராளமான ஆண்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இருமுடி கட்டி நின்றபடியும் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பெண்களை வலுக்கட்டாயமாக அவர்கள் திருப்பி அனுப்புகின்றனர். இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலக்கல் தொடங்கி சபரிமலை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பெண் போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே சமயம், போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்புறப்படுத்தியும், போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படியும் போலீசார் கூறி வருகின்றனர். இதனிடையே மாதவி என்ற பெண், போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்றார். ஆனால், மாதவியை போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தி, திருப்பி அனுப்பியுள்ளனர்.