சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானம், கிட்டத்தட்ட போர்க்களமாகவே மாறிப்போயுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சபரிமலைக்கு பெண்கள் வருகை தந்த நிலையில், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த மாதவி, இரண்டு குழந்தைகளுடன் சபரிமலைக்கு வந்தபோது, அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டார். 

இதன் பின் லிபி என்ற பெண் செய்தியாளர் இருமுடி கட்டுகளுடன் சபரிமலை வந்தார். அவரை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். செய்தியாளர் கவிதா, ரஹானா ஆகியோர் இன்று காலை சபரிமலை சந்நிதானத்துக்கு மிக அருகில் சென்ற நிலையில், அப்போது தந்திரிகள், நம்பூதிரிகள், பக்தர்கள் என பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பதினெட்டாம்படி அருகில் தந்திரிகள் பக்தர்கள் நின்று கொண்டு தர்ணாவிலும் ஈடுபட்டனர். 

பெண்களை கோயிலுக்குள் நுழையவிடாதபடி அவர்கள் சூளுரைத்துள்ளனராம். இதனால் சபரிமலை போர்க்களமாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சபரிமலை கோயிலைப்பூட்டி, சாவியை ஒப்படைத்துவிட்டு திரும்பிச்செல்ல முடிவு செய்துள்ளதாக தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார். ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாகவே நான் இருப்பேன். 

தற்போது எனக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் தலைமை அர்ச்சகர் இவ்வாறு தெரிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.