சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 13-ம் தேதி முதல் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்த நிலையில், தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்க 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் கிடையாது என குறிப்பிட்டது.

இந்நிலையில், சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பிந்து அம்மணி, சமூக ஆர்வலர் ரஹானா பாத்திமா உள்ளிட்டோர் சபரிமலை செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பு இறுதியானது இல்லை. வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் நிலுவையில் உள்ளது. அதனால் அனைவரும் அமைதி காக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாத ஒன்றாகும் என குறிப்பிட்டிருந்தது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஜனவரி 13-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் 9 நீதிபதிகளின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அதில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த, மோகன் சந்தானகவுடர் ஆகியோர்  சபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடப்பெற்றுள்ளனர்.