கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியைச் சேர்ந்தவர் ரெஹானா ஃபாத்திமா (31). பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிஷியனாக பணிபுரிகிறார். அவரது கணவர் மனோஜ் இயக்கிய ஓரினச்சேர்க்கையாளர் படமான 'எகா' என்ற திரைப்படத்திலும்  நடித்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரெஹானா சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். 

கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பை முடித்த இவர், டிவி மற்றும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்த முயன்றார். ஆனால், டிவி - சினிமா அவருக்கு கைகொடுக்காத நிலையில், சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். கேரளாவில், சர்ச்சையான விஷயங்கள் எங்கு நடந்தாலும் அதில் ரெஹானா கலந்து கொண்டு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வாராம். கேரளாவில் அரைநிர்வாண போஸ் கொடுப்பதில் டாப் 10 பேர்களில் இவர் 5-வது இடத்தில் இருக்கிறார். 

கோழிக்கோட்டில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெண்களின் உடல் அமைப்பை வர்ணித்து தெரிவித்த ஆபாசமான கருத்துக்கு எதிராக, ரெஹானா நூதன போராட்டம் நடத்தினார். தர்பூசணியுடன் மேலாடை இல்லாமல் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்திலும் பங்கேற்று பரபரப்பு கிளப்பியவர் இந்த ரெஹானா. சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ஆபாச படங்களையும், மது குடிப்பது போன்ற படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியும் வந்தார். 2016 ஆம் ஆண்டு திருச்சூரில் நடந்த புலிகலி நிகழ்ச்சியில், புலி வேடத்தில் பங்கேற்ற முதல் பெண் என்பதையும் பிரகடனப்படுத்திக் கொண்டார். 

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ரெஹானா, தனது பேஸ்புக் பக்கத்தில் கருப்பு உடையணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்து இருப்பதாகவும், சபரிமலைக்கு கண்டிப்பாக செல்வேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், ரெஹானா சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டார். தர்பூசணிபழம் சாப்பிட்டுக் கொண்டே, ரெஹானா, சபரிமலை கோயில் அருகே செல்லும் காட்சி டிவியில் வெளியான நிலையில், இதனைப் பார்த்த பக்தர்கள், ரெஹானாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். 

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கார் கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து துவம்சம் செய்தனர். ரெஹானா, விஸ்வ இந்து பரிஷத்-ன் துணை அமைப்பான சூர்யா காயத்ரியில் சேர்ந்து அத்வைதா வேதம் கற்றுள்ளாராம். அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி, இந்து மதத்திற்கு மாறியிருக்கிறார். ஆனால் ரெஹானா என்ற பெயரை மாற்றவில்லையாம். அத்வைதா வேதம் கற்ற இவர் சபரிமலை செல்வதற்கு பாஜக உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சுரேந்திரன் என்பவரை பலமுறை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. 

எந்தவொரு விஷயத்திலும், தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே ரெஹானா குறியாக இருந்துள்ளார். ஆர்வக்கோளாறா? அல்லது இதுபோன்ற செயல்பாடுகளில் கலந்து கொள்வது அவருக்கு இயல்பாகவே உள்ளதா? என்பது தெரியவில்லை. மாடல், முத்தப்போராட்டம், அரைநிர்வாணப் போராட்டம், சபரிமலை கோயிலுக்கு செல்வது... என அவர் பங்கேற்கும் நிகழ்வுகள் எல்லாமே பெரும் சர்ச்சையிலேயே முடிந்துள்ளது. 

அது மட்டுமல்ல மரபுவழி இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்தவராக கூறப்படும் ரெஹானா, கணவர் மனோஜுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயேதான் வாழ்ந்து வருகிறாராம். சர்ச்சையில் சிக்குவது என்பது வேறு? சர்ச்சை விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவது வேறு? அப்போது ரெஹானா யார்...? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...