ஜனவரி 2ம் தேதி அன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் ஐயப்பனை தரிசித்து சர்ச்சையை உண்டாக்கிய பிந்து அம்மிணி, கனகதுர்கா என்கிற இரண்டு பெண்களும் உயிருக்கு பயந்து,  சம்பவம் நடந்து பத்து நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பமுடியவில்லை.

கேரளாவின் கண்ணூர் பல்கலைக் கழகத்தில் லெக்சரராகப் பணியாற்றும் பிந்து [40], பொதுப்பணித்துறையில் பணியாற்றும் கனகதுர்கா [39] ஆகிய இருவரும் கேரள  பக்தர்கள் மற்றும் தந்திரிகளின் தந்திரங்களை மீறி சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்து திரும்பினர். அது கேரளா முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த இருவரையும் கொலை செய்துவிட சில இந்து வெறியர்கள் துடிப்பதாக செய்திகள் பரவின.

அதையொட்டி அவர்கள் இருவரையும் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்த கேரளபோலீஸ் சில ரகசிய இடங்களில் தங்கவைத்தது. ஆனால் அந்த இடங்களை, அவர்களை வலைவீசித் தேடிவரும் பக்தர்கள் உடனுக்குடன் மோப்பம் பிடித்துவிடுவதால் போலீஸார் தொடர்ச்சியாக அவர்கள் தங்கும் இடங்களை மாற்றிக்கொண்டே வருகின்றனர்.

தற்போது அவர்கள் தலைமறைவாகி பத்து நாட்களாகியும் பிரச்சினையின் தீவிரம் சற்றும் குறையாததால், கொச்சிக்கு வெளியே, தீவிரவாதிகளைப் போல் ஒரு காட்டு பங்களாவுக்குள் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், வீடு திரும்ப இன்னும் சில காலமாகும் என்றும் சொல்லப்படுகிறது.