சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உத்தரவை மறு சீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கோயிலுக்கு 
பெண்கள் வருவதை ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று முன்தினம் கோயிலின் நடை திறக்கப்பட்ட நிலையில், கோயிலுக்கு செல்ல பெண்கள் வர முயன்றனர். ஆனால், அவர்கள் தடுக்கப்பட்டனர். மேலும், செய்தி சேகரிக்க சென்ற பெண்களும் தடுத்து, திருப்பி அனுப்பப்பட்டனர். 

இன்று காலை, இரண்டு பெண்கள் கோயில் அருகே வந்த நிலையில், தந்திரிகள், நம்பூதிரிகள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த பெண்கள் திரும்பி சென்றனர். இதனால் சபரிமலையில் கடும் பதற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. திருவனந்தபுரத்தில், தலைவர் பத்மகுமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. தேவசம்போர்டு எடுத்திருக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும்.

  

கடந்த இரண்டு நாட்களாக சபரிமலை கோயிலில் நடைபெற்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது. வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பிறகு, எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.