மத்திய ரயில்வேயின் பெண் டிக்கெட் பரிசோதகர் ரூபினா அகிப் ஒரே நாளில் 150 டிக்கெட் எடுக்காத நபர்களிடம் இருந்து ரூ.45,000 அபராதம் வசூலித்து அசத்தியுள்ளார்.
மத்திய ரயில்வேயின் பெண் டிக்கெட் பரிசோதகர் ரூபினா அகிப் இனாம்தார், ஒரே நாளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 150 பயணிகளிடமிருந்து ரூ.45,000 அபராதம் வசூலித்து அசத்தியுள்ளார். மும்பையில் புறநகர் ரயில்கள் தான் உயிர் நாடியாக விளங்குகிறது. தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயிலகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பல ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.
ஒரே நாளில் ரூ.45,000 வசூல்
இதில் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது ரயில்வேக்கு நஷ்டத்துக்கு வழிவகுத்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் பெண் டிக்கெட் பரிசோதகர் ரூபினா அகிப் இனாம்தார் தீவிரமாக களத்தில் இறங்கினார். அதாவது அவர் மத்திய வழித்தடத்தில் ஒரே நாளில் டிக்கெட் இல்லாத 150 பயணிகளிடமிருந்து ரூ.45,000 அபராதம் வசூலித்து அசத்தினார்.
ரயில்வேயின் ராக் ஸ்டார்
இது தொடர்பாக மத்திய ரயில்வே வெளியிட்ட பதிவில், ''மும்பை கோட்டம், தேஜஸ்வினி 2 பிரிவைச் சேர்ந்த பயணச்சீட்டுப் பரிசோதகர் (TTI) ரூபினா அகிப் இனாம்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் மொத்தம் 150 முறையற்ற / டிக்கெட் இல்லாத வழக்குகளைக் கண்டறிந்து, டிக்கெட் பரிசோதனை மூலம் ₹45,705 வருவாயை ஈட்டியுள்ளார். இதில் முதல் வகுப்பில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 57 பேரிடமிருந்து வசூலிக்கப்பட்ட ₹16,430 தொகையும் அடங்கும். இது உண்மையிலேயே ஒரு 'ராக்ஸ்டார்' செயல்பாடு'' என்று பாராட்டியிருந்தது.
நாடு முழுவதும் இப்படி இருக்க வேண்டும்
தொடர்ந்து ரூபினா அகிப் தீவிரமாக செயல்பட்டு மும்பை புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுக்காதவர்களை கண்பிடித்து தட்டித் தூக்கி வருகிறார். இதேபோல் நாடு முழுவதும் மற்ற இடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் செயல்பட்டு ரயில்வேக்கு வருவாய் ஈட்டித் தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
