பிரதமராக மோடி பதவியேற்பதில் உடன்படாத ஆர்.எஸ்.எஸ்.?
நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது. புதிய அரசு அமைவதற்கு ஏதுவாக பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார். அதனை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணியின் கூட்டத்தில் அக்கூட்டணி கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஏ கூட்டணியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்மானத்தை இன்று ஒருமனதாக நிறைவேற்றினார்.
இதனிடையே, நரேந்திர மோடி வருகிற 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். இத்தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி உறுதிபடுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க சுமார் 8000 பேருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த நிலையில், நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவையில் பாஜக பெரும்பான்மை பெறத் தவறியதால், நரேந்திர மோடி பிரதமராக நீடிப்பதில் ஆர்.எஸ்.எஸ். ஆர்வம் காட்டவில்லை என்றும், மாற்று பிரதமர் வேட்பாளர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆய்வு செய்து வருவதாக, சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
இந்த சூழலில், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவான், ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி போன்ற பெயர்கள் மோடிக்கு மாற்றாக பரிசீலிக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் கூறுவதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வரலாற்றில் NDA மிகவும் வெற்றிகரமான கூட்டணி.. பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்..
மோடியை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விசுவாசமான எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். குறுக்கீடு இருந்தபோதிலும், மோடி 3ஆவது முறையாக பதவியேற்பதில் உறுதியாக இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனாலேயே, பாஜகவின் கூட்டத்தை கூட்டாமல் மோடியும் அமித் ஷாவும் முன்கூட்டியே தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளிடம் ஒப்புதலைப் பெற்றதால், மோடி பிரதமராவதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தடுக்க முடியாது எனவும் கூறப்படுகிறது. முன்னதாக, மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணியை விட குறைவான வாக்குகளையே பாஜக பெற்றது. பிரதமர் மோடியும் கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.