பெங்களூரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜ மக்களவை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் ஏராளமானோர் தாக்கப்பட்டனர். தமிழர்களின் பொருட்களும், வாகனங்களும், கடைகளும், தொழில் நிறுவனங்களும் சேதமடைந்தன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதனால், கடந்த 2 மாதமாக கர்நாடகத்தில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், தமிழக அரசு காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அந்த பிரச்சனை சிறிது ஓய்வடைந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் மீண்டும் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. கார்நாடக மாநிலம் சிவாஜி நகரில்,. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்த ருத்ரேஷ் என்பவர் வெட்டி கொலை செய்யப்ப்பட்டார். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு சிவாஜி நகரை சேர்ந்தவர் ருத்திரேஷ் (50). ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதற்கிடையில் பகுதி நேரமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வந்தார்.
நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் ருத்திரேஷ் பெங்களூரு சிவாஜி நகர், கமர்ஷியல் தெரு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற 2 பேர், மறைத்து வைத்திருந்த அரிவாளால்தாக்க முயன்றனர். இதை பார்த்து, சுதாரித்து கொண்ட அவர், அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனால் மர்மநபர்கள், அவரை விடாமல் விரட்டி சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சுருண்டு விழுந்தார். இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ருத்திரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த்தும் பாஜக எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பெங்களூரு மத்திய தொகுதி எம்பி பி.சி.மோகன், மத்திய அமைச்சர் அனந்த்குமார், பாஜ பிரமுகர்கள் கொலை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெங்களூரு மாநகர கமிஷனர் மெக்ரிக், போராட்டம் நடத்திய பாஜக எம்பிக்களிடம் சமரசம் பேசினார். பின்னர், சம்பந்தப்பட்ட கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என உறுதியளித்தார். இதையடுத்து பாஜ எம்பிக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
