ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலையைத் தொடர்ந்து கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர 6-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை அவர் கூட்டி இருக்கிறார்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நேற்று முன்தினம் பாரதிய ஜனதா சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரள முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் . அப்போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த அவர், ஜனநாயகத்தில் அரசியல் படுகொலைகளுக்கு இடமில்லை என்று கூறினார்.

இந்த சூழ்நிலையில் கேரள ஆளுநர் சதாசிவம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேற்று முன்தினம் நேரில் அழைத்து வன்முறை சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டார்.

மேலும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பேச்சு நடத்துமாறு அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கேரள பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று கூட்டம் ஒன்றை கூட்டினார்.

அதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கும்மணன் ராஜசேகரன்,முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோபாலன்குட்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் கேரளாவில் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவருவது என முடிவு எடுக்கப்பட்டது,.

இது தொடர்பாக வருகிற 6-ம்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சமாதான கூட்டங்கள் கண்ணூர் , கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்தப்படும்.

கேரளாவில் வன்முறைகளை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முன்பு நடந்த அமைதி பேச்சு கூட்டங்களில் கட்சி அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளை தாக்ககூடாது என முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக பா.ஜ.க. அலுவலகமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் வீடும் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கும்மணன் ராஜசேகரனும் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

கேரளாவில் அமைதி நிலவ பாரதிய ஜனதா கட்சி சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் தர தயாராக உள்ளோம். மாநிலத்தில் அரசியல் கட்சிகள், மத மற்றும் இன அமைப்புக்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். போலீசார் ஒரு சார்பாக நடந்துகொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.