கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதில் ரூ.6 கோடியை பறிமுதல் செய்ததால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது. மறுமுனையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பல கோடி ரூபாய் பணம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது அரசியல் பழிவாங்கும் செயல் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்  குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இது பற்றி வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஷிவமொக்காவில் வசிக்கும் பரமேஸ், முதல்வர் குமாரசாமி  மற்றும் தேவகவுடாக்கு தூரத்து உறவினர்கள். இவர் ஒப்பந்ததாரரிடம் இருந்து நிறைய  பணத்தை வசூல் செய்து வைத்துள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பணம் தேர்தல் நேரத்தின் போது வாக்களர்களுக்கு விநியோகிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இதையடுத்து, அவரது வீட்டில் மார்ச் 28-ம் தேதி  சோதனை நடத்தினோம். அப்போது பீரோவை திறக்க பரமேஸ் ஒப்புக்கொள்ளவில்லை. சாவி தொலைந்து விட்டது என்று கூறினார். வேறு வழியின்றி பீரோ பூட்டை உடைத்து பார்த்த போது ரூ.6 கோடி பணம் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சில ஆவணங்களும் தங்க நகைகள், ரொக்கம் என ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.