ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் ஏற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் காப்பீடு வழங்கினால்தான் போட்டியை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் திருநாளில் இருந்து தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு, எருது விடும் திருவிழா போன்றவை நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுபிடி வீரரோ பார்வையாளரோ உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.

பிரத்யேகமான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த இழப்பீடு கொடுக்கப்படுகிறது. இந்த காப்பீட்டு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஏற்பாட்டாளா்களைச் சார்ந்தது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அண்மையில் மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 250 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், காப்பீட்டுத் திட்டத்தை போட்டி ஏற்பாட்டாளா்கள் கண்டிப்பாக வழங்கவேண்டும் என்றும் அப்போதுதான் போட்டியை நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.