2000 crore income through ticket sales in railway.

ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய ரெயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோகெயின் கூறியதாவது-

2015-16ம் நிதி ஆண்டு

கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் ரெயில்வே துறை ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ததில் ரூ.17 ஆயிரத்து 204 கோடியும், ரெயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை செய்ததின் மூலம் ரூ.29 ஆயிரத்து 119 கோடியும் கிடைத்தது.

ரூ. 47 ஆயிரம் கோடி

இது கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் ஆன்-லைன் மூலம் ரூ.19 ஆயிரத்து 209 கோடியும், ஆப்-லைன்மூலம் டிக்கெட் விற்பனையில் ரூ. 28 ஆயிரத்து 468 கோடியும் வருவாய் கிடைத்தது.

கூடுதல் வருவாய்

கடந்த 2015-16ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.45 ஆயிரத்து 323. 93 கோடிக்கு டிக்கெட் விற்பனை நடைபெற்றது. ஆனால், இதைக் காட்டிலும், கடந்த நிதி ஆண்டில், கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 354.16 கோடிக்கு டிக்கெட் விற்பனையாகி உள்ளது.

வசதிகள்

முன்பதிவு டிக்கெட்டுகளை பயணிகள் எளிதாக பெறக்கூடிய வகையில் ரெயில் நிலையங்களில் அதிக வசதிகளையும், கவுன்ட்டர்களையும் திறந்ததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை.

மேலும், காகித வடிவ டிக்கெட்டுகளுக்கு பதிலாக, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட் போன்றவற்றை செல்போன் மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த வசதிகள் மத்திய , மேற்கு, கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மத்திய, வடக்கு ரெயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.