Rosogolla originated in West Bengal rule

பெயரைச் சொன்னாலே நாவில் எச்சில் ஊறவைக்கும் ‘ரசகுல்லா’ இனிப்பு வகையின் பூர்வீகம் குறித்து ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு இடையிலான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போராட்டத்தில் வென்று புவிசார் குறியீட்டை மேற்கு வங்காள அரசு பெற்றது.

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பாலில் செய்யப்பட்ட ‘ரசகுல்லா’ இனிப்பு தங்களுக்கே சொந்தம், தங்கள் மாநிலம்தான் அதற்கு பிறப்பிடம் என்று கடந்த 2015ம் ஆண்டு ஒடிசா அரசு உரிமை கொண்டாடியது. 

இதற்கு மறுப்பு தெரிவித்த மேற்கு வங்காள அரசு, ரசகுல்லாவின் பூர்வீகம் எங்கள் மாநிலம்தான் என்று கூறி, அதற்கான ஆதாரங்களை வௌியிட்டது. இதையடுத்து, இரு மாநில அரசுகளும், சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு மையத்தில் வழக்கு தொடர்ந்தன. 

ரசகுல்லாவின் பூர்வீகம் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள அரசு அளித்த ஆதாரங்கள் வலிமையாகவும், நம்பத்தக்க வகையில் இருந்ததால், ரசகுல்லாவின் பூர்வீகம் மேற்கு வங்காளம் என்று தீர்ப்பளித்து அதற்குரிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

இது குறித்து கொல்கத்தாவில் உள்ள காப்புரிமை மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தின் துணை இயக்குநர் சஞ்சய்பட்டாச்சார்யா கூறுகையில், “ ரசகுல்லாவின் பூர்வீகம் மேற்குவங்காளம்தான் என்று உறுதி செய்து அதற்கான புவிசார் குறியீட்டை புவிசார் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதன்படி, ரசகல்லா இனிப்பு வகை என்பது இந்த மாநிலத்தோடு, இந்த நிலப்பரப்போடு, சமூகத்தோடு தொடர்புடையது என்று தௌிவாகிறது’’ என்றார். 

மேற்குவங்காளத்தில் ரசகுல்லா இனிப்பு வகையை நிபின் சந்திர தாஸ் என்பவர் கடந்த 1880ம் ஆண்டுகளில் அறிமுகம் செய்தார்.

அவரின் கொள்ளுப்பேரனும், கே.சி. தாஸ் நிறுவனத்தின் இயக்குநரான திமான் தாஸ் புவிசார் குறியீடு கிடைத்தது குறித்து கூறியதாவது-

இந்த செய்தியைக் கேட்டதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. புவிசார் குறியீட்டை பெற நாங்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினோம். 

ஏராளமான ஆவணங்களைத் திரட்டி மேற்கு வங்காள அரசுக்கு அளித்தோம். 2 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி, முதல்வர் மம்தா பானர்ஜிக்கே சேரும். மிக தீவிரமாக செயல்பட்டு, ஈடுபாட்டுடன், அதிகாரிகளை தொடர்ந்து கவனம் செலுத்த மம்தா உத்தரவிட்டு இருந்தார். ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவது தொடர்பான வழக்குச்செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டது’’ என்று தெரிவித்தார்.