பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிப்பதற்காக பணம் கைமாறியது உண்மை என்றும், அது தொடர்பான நகல் மூலமாக பணம் கைமாறியதைக் கண்டுபிடித்ததாகவும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கூறியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இது குறித்து, அறிக்கை ஒன்றையும் ரூபா கர்நாடக அரசுக்கு அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அம்மானில முதலமைச்சர் 

சித்தராமையா, தனிநபர் கமிஷன் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

சிறைத்துறை அதிகாரியாக இருந்த டிஐஜி மற்றும் டிஜிபி சத்யநாராயணராவ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பெங்களூர் சிட்டியின் போக்குவரத்து துறை ஆணையராக ரூபா மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் குறித்து, டிஐஜி ரூபாய் புதிய தகவல்களை அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பது குறித்து எனக்கு கைதிகள் நிறைய தகவல் அளித்தனர். இதற்காக அவர்களை வேறு ஜெயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நான் செய்த பணியை துணிச்சல் என்று கூற முடியாது, என் பணியைத்தான் செய்தேன்

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிப்பதற்காக பணம் கைமாறியது உண்மை. நேர்மையான, நியாயமான, முழுமையான விசாரணை நடந்தால் உண்மை வெளியே வரும். சரியான நேரத்தில் ஆவணங்களை வழங்குவேன்.

டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமான மல்லிகார்ஜுனா மூலம் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ரூ.2 கோடி கைமாற்றியுள்ளதாக தகவல் வந்தது. முதலில் அதை நான் நம்பவில்லை.

அதன் பிறகு டெல்லி போலீசாரிடம் அவர்கள் இருவரும் கொடுத்த வாக்குமூலம் தொடர்பான நகல் கிடைத்தது. அதன் பேரில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க பணம் கைமாறியதை கண்டுபிடித்தேன்.

இந்தப் பணம் பெங்களூர் சிறையின் தலைமை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் மூலமாக டி.ஜி.பி. சத்திய நாராயண ராவுக்கு சென்றுள்ளது. இந்த வி‌ஷயத்தில் கிருஷ்ணகுமார் மூலம் சிறையில் சசிகலாவை பிரகாஷ் சந்தித்தார். தற்போது இந்த ஊழல் சம்பந்தமாக கர்நாடக லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக கேள்விப்பட்டேன்.

எனது நடவடிக்கைக்காக என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் தொடரட்டும். அதை சந்திக்க தயார். மேலும் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. சிறை விதிமுறைப்படி முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு கைதிகள் மட்டும் தங்களுக்கு வேண்டிய உடை அணிந்து கொள்ளலாம் என்று ரூபா கூறினார்.