உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி அபூர்வா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோஹித் சேகர் திவாரி (வயது 40) டெல்லியில் வசித்து வந்தார். ரோகித் சேகர் திவாரி அவருடைய வீட்டில் கடந்த 16-ம் தேதி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

 

இதனையடுத்து அவருடைய உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், ரோஹித் சேகர் திவாரி கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது. அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

 பின்னர் ரோஹித் சேகர் திவாரியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அங்குள்ள 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 2 கேமராக்கள் வேலை செய்யவில்லை. ரோஹித் சேகர் திவாரியின் மனைவியிடம் உறவினர் மற்றும் வேலைக்காரப் பெண்ணிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். சொத்துக்காக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரோஹித் சேகர் திவாரியின் மனைவி அபூர்வாவை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபூர்வாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசாரின் சந்தேகத்தின் பேரில்  கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.