2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மோசமான செயல்திறனால் அதிர்ச்சியடைந்த லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் கட்சி வெறும் 25 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்த மறுநாள், அரசியலில் இருந்து "விலகுவதாகவும்", தனது குடும்பத்தை "துறப்பதாகவும்" சனிக்கிழமை தெரிவித்தார்.
தேஜஸ்வியின் உதவியாளர் மீது ரோகிணி குற்றச்சாட்டு
தோல்விக்கான முழுப் பழியையும் ஏற்றுக்கொண்ட ரோகிணி, ஆர்ஜேடி எம்.பி.யும், தேஜஸ்வி யாதவின் நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் யாதவை கடுமையாக சாடி, "இதைத்தான் சஞ்சய் யாதவ் என்னைச் செய்யச் சொன்னார்" என்றார்.
"நான் அரசியலில் இருந்து விலகுகிறேன், என் குடும்பத்தையும் துறக்கிறேன்... இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸும் என்னைச் செய்யச் சொன்னார்கள், நான் எல்லாப் பழியையும் ஏற்றுக்கொள்கிறேன்," என்று ரோகிணி ஆச்சார்யா கூறினார்.
லாலுவின் குடும்பத்தில் விரிசல்
ரோகிணி ஆச்சார்யாவின் மூத்த சகோதரர், தேஜ் பிரதாப் யாதவ், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சியில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். இப்போது ரோகிணி குடும்பத்தை "துறப்பதாக" அறிவித்திருப்பதால், லாலு யாதவின் குடும்பத்திற்குள் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
தேஜ் பிரதாப் யாதவ், தனது சொந்தக் கட்சியான ஜனசக்தி ஜனதா தளத்தை (JJD) தொடங்கி, மஹுவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவர் பெரும் பின்னடைவைச் சந்தித்து, மூன்றாவது இடத்தையே பிடித்தார். லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று 44,997 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார், அதே நேரத்தில் ஆர்ஜேடி வேட்பாளர் முகேஷ் குமார் ரௌஷன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
பீகாரில் NDA அலை, ஆர்ஜேடி படுதோல்வி
140க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட போதிலும், பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெறும் 25 இடங்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக ஆர்ஜேடி படுதோல்வி அடைந்த ஒரு நாள் கழித்து, ரோகிணி ஆச்சார்யா தனது குடும்பத்துடனான உறவுகளைத் துண்டிக்கும் முடிவை எடுத்துள்ளார்.
பீகாரில் NDA-வின் 'சுனாமி' எதிர்க்கட்சியான மகாகன் பந்தன் கூட்டணியை அடித்துச் சென்றது. பாஜக 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஜனதா தளம் (ஐக்கிய) 85 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆளும் கூட்டணியின் மற்ற கூட்டணிக் கட்சிகளும் அதிக வெற்றி விகிதத்தைப் பதிவு செய்தன.
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட மகாகன்பந்தன கூட்டணிக் கட்சிகள் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்தன. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்ட பிறகு, ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படுதோல்வியை சந்தித்து பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் ஆளும் NDA கூட்டணி 202 இடங்களைப் பெற்று, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் NDA 200 இடங்களைக் கடப்பது இது இரண்டாவது முறையாகும். 2010 தேர்தலில், அது 206 இடங்களை வென்றிருந்தது.
