மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய லோக் சம்தா தலைவரும் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று விலகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து வரும் ராஷ்டிரிய லோக் சம்தா தலைவரும் மத்திய அமைச்சராக இருந்த உபேந்திர குஷ்வாஹா, அடுத்த மக்களவை தேர்தலிலும் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்று கூறிவந்தார். ஆனால் தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கும்-உபேந்திர குஷ்வாஹாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதற்கிடையில், ராஷ்டிரிய ஜனதா தள தேஜஸ்வி யாதவ், லோக்தந்திரிக் ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துள்ளது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  

இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா வெளியேறுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் வெளியேறுவது பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.