அனைத்து வங்கிகளும் 4 நாட்கள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளும் 4 நாட்கள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதோடு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை வெளியீட திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசின் வங்கிகளுக்கு 20,000 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் அதில் கூறியிருந்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கைவிடுதல் மற்றும் தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் வருகிற 28, 29 ஆம் தேதி ஆகிய இருநாட்கள் நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் என நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள 73 ஆயிரம் வங்கி கிளைகள் மற்றும் அதில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னதாக வரும் 26 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் வங்கிகளுக்கு வார விடுமுறையாக உள்ள நிலையில், அதற்கு அடுத்து மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்களுக்கும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் மொத்தமாக 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட உள்ளன. இதனால் வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி பணிகளான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற அனைத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
