முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரணை நடத்த லெப்டினன்ட் கவர்னர் அசல் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஆட்சியமைத்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், கட்சித்தலைமையை வெளிப்படையாக விமர்சித்தார்.

அவரை தொடர்ந்து மேலும் பல தலைவர்கள் கட்சித்தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், குமார் விஸ்வாசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் அவர்கள் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில் குமார் விஸ்வாசின் ஆதரவாளர் என கருதப்படும் நீர்வளத்துறை மந்திரி கபில் மிஸ்ராவின் மந்திரி பதவி நேற்று முன்தினம் அதிரடியாக பறிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரின் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன் என அறிவித்து இருந்தார். அதன்படி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தார் அதை பார்த்தேன் என கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். கபில் மிஸ்ராவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இந்த குற்றச்சாட்டையடுத்து, கவர்னர் அசல் பைஜால் கெஜ்ரிவால் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்ய மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார்.  எம்.கே.மீனா தலைமையிலான விசாரணைக் குழு விசாரணையை தொடங்க உள்ளனர்.

கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது. கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டு நகைப்புக்கு உரியது என்றுதுணை முதல்வர் மணிஷ் சிஷோடியா தெரிவித்துள்ளார்.

ஆனால், லஞ்ச ஒழிப்பு துறையிடம் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை அளிப்பேன் , அனைத்து தகவல்களையும் தெரிவிப்பேன் என கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.