இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த 'YIHA' டிரோன் துருக்கியில் தயாரிக்கப்பட்டது.
இந்திய இராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் ஒன்று முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய இராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு இராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
டிரோனை சுட்டு வீழ்த்திய ராணுவம்
இந்த எல்லை மோதலின்போது, பாகிஸ்தான் இராணுவம் ஏவிய அனைத்து டிரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு (Indian Air Defence System) துல்லியமாகச் சுட்டு வீழ்த்தியது.
அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களில் ஒன்று தான் துருக்கியில் தயாரிக்கப்பட்ட 'YIHA' என்ற பெயருடைய டிரோன். இந்த 'YIHA' டிரோனை இந்திய இராணுவம் தற்போது டெல்லியில் உள்ள இராணுவ தளபதியின் இல்லத்தில் காட்சிக்கு வைத்துள்ளது.
காட்சிக்கு வைக்கப்பட்ட டிரோன்
இந்த டிரோன் சுமார் 10 கிலோ வெடிபொருட்களுடன் கடந்த மே 10-ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் இருக்கும் ஜலந்தர் பகுதியை நோக்கி பாகிஸ்தான் இராணுவத்தால் ஏவப்பட்டது.
இருப்பினும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த டிரோனை அமிர்தசரஸ் அருகே சுட்டு வீழ்த்தியது.
கீழே விழுந்த டிரோனை இந்திய இராணுவ அதிகாரிகள் கைப்பற்றி, அதன் பாகங்களை ஒருங்கிணைத்துக் தற்போது காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்தக் காட்சி, நாட்டின் வான் பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்துவதுடன், பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க இந்திய இராணுவம் எந்த அளவு தயாராக உள்ளது என்பதையும் உணர்த்துகிறது.


