Restaurant In Pune Which Serves A Baahubali Thali With Kattappa Biryani And Devasena Paratha
மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் ஒரு ஓட்டலில் பாகுபலி பரோட்டா, கட்டப்பா பிரியாணி, சிவகாமி ஷாகி பக்வான் என பாகுபலி திரைப்படத்தின் பெயரில் உணவுகளும், விருந்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த விருந்தில் உள்ள உணவுகளைச் சுவைக்க அந்த ஒட்டலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் குவிந்து வருகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் 2 பாகங்களாக உலகெங்கும் வெளியாகி வசூலில் சக்கை போடுபோட்டது. ஏற்கனவே, பாகுபலி பட்டாசு, பாகுபலி குடை என வந்துவிட்டநிலையில், இப்போது பாகுபலி விருந்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புனே நகரில் ஜே.எம். சாலையில் ‘ஹவுஸ் ஆப் பரோட்டா’ ஓட்டல் அமைந்துள்ளது. இங்கு தான் பாகுபலி திரைப்படத்தின் வரும் பாத்திரங்கள் பெயரில் உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வடஇந்திய பெயரில் உணவுகளை சாப்பிட்டு அலுத்துப்போன மக்களுக்கு பாகுபலி பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உணவுகள் மிகவும் பிடித்துவிட்டன.
இதில் குறிப்பாக ‘கட்டப்பா பிரியாணி’, ‘தேவஸேனா பரோட்டா’, ‘பல்வாள் தேவா லஸி’, சிவகாமி ஷாஹி பாக்வான் மற்றும் மெகா சைஸ் ‘பாகுபலி பரோட்டா’ போன்ற பல உணவு வகைகள் இதில் இருக்கின்றன. இத்தனை வகைகளையும் தனியாக ஒரு நபரால் சாப்பிட முடியாது. 5 நபர்களுக்கு குறையாமல் இந்த விருந்துகளை சுவைத்து மகிழலாம். மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரி சேர்த்து இந்த விருந்தின் விலை ரூ.1,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் குறித்து இயக்குநர் ராஜமவுலி கூறுகையில், “ பிரபாஸ் தனி ஒருவராக 10-15 பிளேட்பிரியாணியை கூடச் சாப்பிடுவார், அதிலும், மீன், கோழி,ஆடு, மாட்டிறைச்சி, வான்கோழி என அத்தனை வகைகளையும் ருசிப்பார். இத்தனை வகை இருப்பதாகக் கூட உங்களுக்குத் தெரியாது, அத்தனை ரகங்களில் பிரியாணியை சாப்பிடுவார்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
