சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வதற்காக இளம் பெண் ஒருவர் மாலையிட்டு விரதத்தை தொடங்கியுள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐயப்பன் சுவாமியை வணங்க இந்த இளம் பெண் தன்னுடைய விரதத்தை தொடங்கியுளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி போராட்டமும் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. கேரள மாநிலமே போராட்டக்களமாக மாறிப்போயுள்ளது. 

ஐயப்பனின் மகிமையை அறிந்த நாங்கள் உள்ளூரில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கே செல்ல மாட்டோம். சபரிமலையில் தவக்கோலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற பாரம்பரிய முறையை தீர்ப்பு மூலம் எப்படி மாற்றலாம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17 ஆம் தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த இந்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஸ்மா என்ற திருமணமான இளம் பெண் ஒருவர் சபரிமலைக்குச் செல்ல மாலையிட்டு விரதத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து ரேஸ்மா கூறும்போது, சபரிமலை கோயிலுக்கு சென்று சுவாமியைத் தரிசிப்பதற்காக மாலையிட்டு விரதம் தொடங்கியுள்ளேன். 

41 நாள்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லுவேன். மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, இயற்கை உபாதை போன்றதுதான் மாதவிடாயும். கடவுள் நம்பிக்கையில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. நான் சபரிமலை செல்ல அரசும், பொதுமக்களும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ரேஸ்மாவின் இந்த முடிவுக்கு எத்தனைபேர் ஆதரவு குரல் கொடுப்பார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.