நம் நாட்டில் வங்கி துறை சிறப்பாக செயல்பட்ட முக்கிய காரணமே இந்திய ரிசர்வ் வங்கிதான். ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றிதான் நம் நாட்டில் வங்கிகள் தொடங்கவும், செயல்படவும் முடியும். தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் என எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். வங்கிகள் தவறு செய்து இருப்பதை கண்டுபிடித்தால் கடும் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ரிசர்வ் வங்கியின் இந்த பெரியண்ணன் நடவடிக்கையால்தான் வங்கியில் போட்டவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது. அதேசமயம் ரிசர்வ் வங்கி என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய்யை ஊற்றி கண்காணித்தாலும் வங்கிகள் தவறு செய்துவது நடக்கதான் செய்கிறது. தற்போது லட்சுமி விலாஸ் வங்கியும், சிண்டிகேட் வங்கியும் தவறு செய்து ரிசர்வ் வங்கியிடம் சிக்கியுள்ளன. 

வருமானம் அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிமுறைகளுக்கு இணங்காமல் லட்சுமி விலாஸ் வங்கி இருந்ததை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. இதனையடுத்து அந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்தது. இதுதவிர சிண்டிகேட் வங்கிக்கு ரூ.75 லட்சம் அபராதமாக ரிசர்வ் வங்கி விதித்தது. மோசடி வகைப்பாடுகள் மற்றும் வீட்டுவசதி பிரிவு தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்காததால் சிண்டிகேட் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது.