reserve bank stop to print 2000 rupees notes...SBI statement
2000 ரூபாய் நோட்டுகள் பரிமாற்றத்தில் பெரும் சவால்கள் உள்ள நிலையில் முதலில் சகஜமான பணப் புழக்கத்துக்காக தேவையான அளவுக்கு வெளியிட்டு விட்டு, அடுத்து அவற்றை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். கறுப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால், காகித பண புழக்கம் பெருமளவு குறைந்தது.

அதே நேரத்தில் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த அவதியை குறைப்பதற்காக.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மேலும் புதிய 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களையும் வெளியிட்டது.

இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டதால் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக முதலில் காகித பண புழக்கம் சீராவதற்காக தேவையான அளவுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டு விட்டு, பின்னர் அவற்றை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி இருக்கலாம் அல்லது புழக்கத்துக்கு விடாமல் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பாரத ரிசர்வ் வங்கி அளித்த தகவல்களின் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட எக்கோபிளாஷ் அறிக்கையில், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பரிமாற்றத்தில் சவால்களை ஏற்படுத்தின. எனவே முதலில் சகஜமான பணப் புழக்கத்துக்காக தேவையான அளவுக்கு வெளியிட்டு விட்டு, அடுத்து அவற்றை அச்சிடுவதை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது குறைந்த எண்ணிக்கையில் அச்சிட்டிருக்க வேண்டும் என்று கருத வேண்டியதிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிக்கை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனகே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்தபோது கடும் பாதிப்புக்குள்ளான பொது மக்கள் தற்போது 2000 ருபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்தாலோ அல்லது புழக்கத்தைக் குறைத்தாலோ மீண்டும் சிரமத்திற்குள்ளாக வேண்டும் என கருதுகின்றனர்.
