நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.  

டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக காலை 9.50 மணியளவிலேயே விழா தொடங்கியது. மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்த குடியரசுத்தலைவர், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தது. 

குடியரசு தின விழாவில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக தென்ஆப்ரிக்க அதிபர் ராமபோஸா கலந்து கொண்டார். குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக், நசீர் அகமது வானிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை அவரது மனைவி, குடியரசு தலைவரிடமிருந்து பெற்று கொண்டார். காஷ்மீரை சேர்ந்த ஒருவர் அசோக் சக்ரா விருது பெறுவது இது முதல்முறையாகும். 

முன்னதாக டெல்லி இந்தியா கேட் பகுதியில், போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் 25000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.