20 ஆண்டு கனவு; ஸ்ரீநகர்-கன்னியாகுமரி நேரடி ரயில் சேவை; பிரதமர் மோடி ஜன.26ல் தொடங்கி வைக்கிறார்?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர்-கன்னியாகுமரி ரயில் சேவையை பிரதமர் மோடி ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட கால கனவு நனவாகிறது.
சவாலான ரயில் பாதை அமைப்பு
இந்தியாவின் மிக அழகிய மாநிலமாக காஷ்மீர் விளங்கி வருகிறது. மலைகள், பள்ளத்தாக்குகள் ஏராளம் இருப்பதால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் ரயில் போக்குவரத்து இல்லை. இதனால் ஜம்மு – உத்தம்பூர் – கட்ரா – ஸ்ரீநகர் – காசிகுண்டு – பாராமுல்லா இடையே மொத்தம் உள்ள 345 கிமீ தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் 20 ஆண்டு கால கனவு திட்டமான இது இப்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மலைகள், பள்ளத்தாக்குகள், கடும் பனிப்பொழிவு ஆகிய சவால்களை சமாளித்து ரயில் பாதைகள் அமைக்கபப்ட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலம் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.
CRS அனுமதி
மேலும் இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம், ஏராளமான குகைப்பாதைகள் இந்த வழித்தடத்தில் உள்ளன. இந்நிலையில், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்திற்கு ரயில்வே பாதுகாப்புத் தலைமை ஆணையர் (CRS) அனுமதி கிடைத்துள்ளது. அன்மையில் கத்ரா-ரியாசி பிரிவில் இரண்டு நாள் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்த நிலையில், இப்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர்-கன்னியாகுமரி நேரடி இணைப்பு
அதாவது ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடந்த விரிவான ஆய்வின் அடிப்படையில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களை இயக்க சம்பந்தப்பட்ட ரயில்வே வாரியத்துக்கு ரயில்வே பாதுகாப்புத் தலைமை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் மெயின் லைனில் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும், 'டர்ன்அவுட்டில்' மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்திலும் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் தென்கொடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீரையும், காஷ்மீரில் இருந்து இந்தியாவின் மற்ற இடங்களையும் ரயில் மூலம் இணைக்க வழி பிறந்துள்ளது.
ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைப்பு?
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரையிலான நேரடி ரயில் சேவையை பிரதமர் மோடி குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர உள்ளது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது.
மேலும் ஸ்ரீநகரில் இருந்து கத்ரா செல்லும் வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடி ரயில் இயக்கப்பட்டால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.