சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி அன்று மாலை சுமார் 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் நோக்கத்துடன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி என்ற பெண், இரண்டு குழந்தைகளுடன் வந்தார். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் பாதியிலேயே திரும்பிச் சென்றனர். 

மாதவியைத் தொடர்ந்து லிபி என்ற பெண் செய்தியாளர் இருமுடி கட்டுகளுடன் சபரிமலை செல்ல வந்தார். அவரை பத்தணம் திட்டா 
பகுதியிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவரால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து லக்னோவைச் சேர்ந்த பெண் சுகாசினி ராஜ், நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் சபரிலமலை ஏறினார். மரக்கூட்டம் பகுதிக்கு அவர் சென்றபோது, பக்தர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதனை அடுத்து, தான் பக்தர்கள் மனதை புண்படுடத்த விரும்பவில்லை என்று கூறி திரும்பிச் சென்று விட்டார். இந்த நிலையில்தான் செய்தியாளர் கவிதா என்பவரும், கொச்சியைச் சேர்ந்த ரஹானா என்பவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்றனர். ஆனால் பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் பம்பை திரும்பினர். 

இவர்கள் இருவரும் கோயில் சன்னிதானத்திற்கு 500 மீட்டர் முன்பு வரை சென்று திரும்பி விட்டனர். ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள், நம்பூதிரிகள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் 18 ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டமும் நடத்தி வருகின்றனர். சபரிமலை கோயிலுக்கு பெண்கள் மட்டுமல்லாது செய்தி சேகரிக்க வரும் பெண் செய்தியாளர்களையும் அனுமதிக்கப்போவதில்லை என்று சபரிமலை நிர்வாகம் அதிரடியாக கூறி உள்ளது.