Renowned Malayalam writer Punathil Kunjabdulla passes away

மலையாளத்தில் பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்த டாக்டர் புன்னத்தில் குஞ்ஞப்துல்லா வெள்ளிக்கிழமை இன்று காலை 7.45 மணி அளவில் கோழிக்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது சார்ந்த உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

கடந்த ஒரு வருடமாகவே உடல் நலம் குன்றி அவதிப்பட்டு வந்தார். இன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் வடகரவில் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

வடகரவுக்கு அருகில் ஒஞ்சியம் என்ற கிராமத்தில் 1940 இல் பிறந்தவர் குஞ்ஞப்துல்லா. மருத்துவராகத் தொழிலைத் தொடங்கியவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்து அரசு மருத்துவராக 1970-73 வரை பணியில் இருந்தார். 


மிகச் சிறந்த மலையாள எழுத்தாளராகத் திகழ்ந்த குஞ்ஞப்துல்லா, தனது ஸ்மரகாசிலகள் (நினைவுக் கற்கள்) என்ற நாவலுக்கு 1980ல் சாகித்ய அகதமி விருது வ்ருது பெற்றார். மேலும் 1978, 1980ல் கேரள சாஹித்ய அகதமி விருதும் பெற்றவர். மேலும், மாத்ருபூமி இலக்கிய விருது, முட்டாஹ் வெர்கி விருது, விஸ்வவித்யாபீடம் விருது என பல விருதுகளையும் பெற்றவர். 

மருன்னு, பரலோகம், அக்னிகனவுகள், புன்னதிலிண்டே நாவலுக்குள், அம்மயே கண்ணன் ஆகிய நாவல்களும், அலிகர் கதகள், க்ஷேத்ரவிலக்குகள், மலன்னுகளிலே அப்துல்லா, குரெ ஸ்த்ரீகள், ப்ரணய கதகள் ஆகிய சிறுகதைகள் குஞ்ஞப்துல்லாவின் பெயரை இன்றளவும் பிரபலமாக்கி சுமந்து கொண்டுள்ளன. 

எல்லாவற்றையும் விட மிக ஆச்சரியகரமாக, அரசியல் ஆசையுடன் தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்துடன், கடந்த 2001ல் பேபோர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட்டு, 10 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாமிடம் வந்தார்.