டாக்டரிடமும், வக்கீலிடமும் எதையும் மறைக்க கூடாதுதான். அதற்காக டாக்டர் படிப்பில் சேருவதற்காக தேர்வு எழுத வந்த பொண்ணை ’அது’ தெரிந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் ‘பிரேசியரை கழட்டு’ என்று சொன்ன தேர்வுக்குழு தறுதலைகளை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று காலுக்கடியில் தேடிக் கொண்டிருக்கிறது தேசம்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு முறைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்தது. ஆனால் அதையெல்லாம் தூக்கி அக்கட கடாசிவிட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தேர்வை நடத்தி முடித்துவிட்டது மைய அரசு.

இந்நிலையில் ’நீட்’ வேண்டுமா அல்லது வேண்டாமா எனும் சர்ச்சையை விட அது நடத்தப்பட்ட விதம்தான் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்திருக்கிறது நாடெங்கும். அதாவது நுழைவுத்தேர்வு மையத்துக்கு வந்த மாணவ, மாணவிகளை  பிட் அடிப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனும் பெயரில் மெட்டல் டிடெக்டர் வைத்து ஸ்கேன் செய்வது, பிட் இருக்கிறதா என்று காதுக்குள்ளும் கூட டார்ச் அடித்து பார்ப்பது என்று நுணுக்கம் காட்டினர்.

முழுக்கை சட்டையில் வந்த தேர்வாளர்களை ‘சட்டையை மாத்தி, அரைக்கை சட்டையை போட்டுட்டு வா’ என்றார்கள். அரைக்கை சட்டை இல்லை என்று கூறியவர்களுக்கு, டேபிளில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து பாதி கையை வெட்டிவிட்டார்கள் (நல்ல வேளை சட்டையின் கையைதான்.).

முழுக்கை வைத்து டாப் போட்டு வந்த பொண்ணுங்களுக்கும் இதே நிலைதான். சட்டைக் கையை வெட்டியதற்கே பல மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கொதித்துவிட்டார்கள். இதற்கே இப்படியென்றால் கேரளாவில் ஒரு மாணவிக்கு நடந்த கொடுமை படு கேவலமானது.

கண்ணூரில் ஒரு உள்வாங்கிய பகுதியிலிருந்த தேர்வு மையத்தில் மெட்டலால் ஆன கொக்கிகளை கொண்ட பிரேசியரை அணிந்திருந்த பொண்ணுங்களை ‘பிராவை கழட்டி வெச்சுட்டு வா.’ என்று தேர்வுக்குழு சொல்லியிருக்கிறது. இந்த தகவல் தேசம் முழுவதும் பரவ நீட் தேர்வுத்துறையின் நிர்வாக குழுவுக்குக் எதிராக அசிங்கம் தோய்த்த செருப்பை எடுத்து காட்டி வருகின்றனர் பெற்றோர்கள்.

பையனூர் அருகே குன்கிமங்கலத்தில் உள்ள டிஸ்க் ஆங்கில பள்ளியில் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நீட் தேர்வு எழுத வந்திருந்தார், அவரை மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தனர். பிரெஸ்ட் பகுதியில் ஸ்கேன் செய்தபோது பீப் சவுண்டு கேட்டிருக்கிறது. மெட்டல்ல ஆன விஷயத்தை உள்ளே வெச்சிருக்கியா என்ன? என்று கேட்டபோது ‘பிரேசியர்ல உள்ள கூக் (கொக்கி) மெட்டல். அதான் வேற ஒண்ணுமில்லை.’ என்று அந்த பெண் தயங்கி கூற, ‘அப்போ அதை கழட்டி வெச்சுட்டு வா’ என்று ஏதோ செருப்பை கழட்ட சொல்வது போல் சர்வ சாதாரணமாக சொல்லியிருக்கிறது அசிங்கம் பிடித்த தேர்வுக்குழு. தலைசுற்றிவிட்டது அந்த பெண்ணுக்கு.

‘ஓ காட்! எக்ஸாம் ஹால்ல வெச்சு பிரேசியரை கழட்டவா?’ என்று பதறி, எவ்வளவோ கெஞ்சியும் மசியவில்லை அவர்கள். ‘ஒண்ணு மெட்டல் இல்லாத பிராவை போடு. இல்லேன்னா பிராவை கழட்டி வெச்சுட்டு வா. எனக்கு மெட்டல் வெச்ச பிராதான் முக்கியம்னா எக்ஸாம் எழுதாதே, போயிடு.

காரணம் எங்களுக்கான ரூல்ஸ் அப்படி.’ என்று கறாராக சொல்லிவிட்டனர்.  பாத்ரூமில் சென்று கழட்டிட்டு வரவா என்று கேட்டபோது அதற்கும் அனுமதியில்லை. தேர்வு துவங்க பத்து நிமிடமே இருந்திருக்கிறது.

கடைசியில் வேறு வழியில்லாமல் பிரேசியரை கழட்டியேவிட்டார் அந்த இளம்பெண். ‘நல்ல வேளையா என்ட்ரி பாயிண்ட்ல லேடி சூப்பர்வைஸர்கள் மட்டுமே இருந்தாங்க. அதனால அழுதுகிட்டே பிராவை கழட்டிட்டேன்’ என்று தன் பெயர் மற்றும் அத்தனை அடையாளங்களையும் வெளியிட வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் மீடியாவிடம் சொல்லியிருக்கிறார்.

கண்ணூர் மாவட்டத்தில் இப்படி பிரேசியரை கழட்ட வேண்டிய நிலை இன்னும் சில இளம்பெண்களுக்கு வந்தது என்கிறார்கள். சில இடங்களிலோ டாப்பின் அலுமினிய பட்டன்கள் அகற்றப்பட்டதால், அப்பாவை அனுப்பி புதிய டாப் வாங்கி வரச்சொல்லி அழுதுகொண்டே அணிந்திருக்கிறார்கள் பொண்ணுங்க.

இந்த விவகாரத்தில் இன்னும் விவரிக்க வேண்டிய அந்தரங்க அவலங்கள் ஏராளம். ஆனால் நாகரிகம் கருதி தவிர்ப்போம்.

பிரேசியரை கழட்ட சொன்ன விவகாரம் வெடித்துக் கிளம்பிய பின் ‘எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் நிச்சயம் விரிவாக விசாரனண நடத்த தயார்.’ என்கிறது கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

கேரளாவில் இப்படியென்றால் நாடெங்கும் பல இடங்களில் வெவ்வேறு விதமான டார்ச்சர்கள். இது பற்றி பேசும் பெற்றோர்கள் மாணவிகளை பிராவை கழட்டு, டாப்பை கழட்டு, சட்டை கையை வெட்டுன்னு படுத்தி எடுத்து பதற்றப்படுத்தி உள்ளே அனுப்பினாங்க. ஹை பிரஷரோட போனாங்க குழந்தைங்க. இதனாலே படிச்சதெல்லாம் பலருக்கு நினைவுக்கே வரலையாம்.

கொஸ்டீன் பேப்பரும் ரொம்ப கடினமா இருந்ததாலே நொந்து நிலைகுழைஞ்சு போயிட்டாங்க. இப்படி மோசமா ஒரு நுழைவுத்தேர்வு தேவையா? பொதுவா நல்லா படிக்கிற பசங்க, பொண்ணுங்க இந்த தேர்வுல தோல்வியடைஞ்சா அதுக்கு பொறுப்பு

தேர்வுத்துறைதான்.’ என்று பொளந்து கட்டுகிறார்கள்.
ஆனால் நீட் தேர்வுத்துறையோ இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ‘மனித உயிரை காப்பாற்றும் படிப்பில் சேர்பவர்கள் மிக பொறுப்பும், கவனமும், தகுதியும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்த நுழைவுத்தேர்வை நடத்துகிறோம்.

9:30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை, முழுக்கை சட்டை அணிந்து வர கூடாது, மாணவிகள் ஆபரணங்கள் அணிந்து வர கூடாது என்று தேர்வின் ரூல்ஸை எல்லாம் விரிவாக தேர்வு விண்ணப்பத்திலும், ஹால் டிக்கெட்டிலும், இணைய தளத்திலும் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இத்தனை மாதங்களாக அதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டிவிட்டு விதியை மீறி வந்தவர்களை எப்படி அப்படியே அனுமதிக்க முடியும்?

மாணவர்களுக்கு மட்டுமில்லை இந்த விதிமுறைகளை படித்து தயார் நிலையில் தங்கள் பிள்ளையை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் பெற்றோர்களுக்கோ அல்லது நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி பணம் வசூலித்து குவித்த தனியார்களுக்கோ யாருக்குமே இல்லை. தேர்வு மையம் எங்கிருக்கிறது என்று கூட தெரியாமல் அங்கேயும் இங்கேயுமாக சுற்றிவிட்டு கடைசியில் 10 மணிக்கு வந்து நின்று உள்ளே விட சொல்லி பிரச்னை செய்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? இப்போ சொல்லுங்க யார் மீது தப்பு?’ என்கிறார்கள்.

நேரம் தவறுதல், ஆபரணம் அணிதல் என்பதற்கெல்லாம் தண்டனை சரிதான்.
ஆனாலும் பிரேசியரை கழட்டி வைக்க சொன்னதை எப்படி ஏற்பது? பொது இடத்தில் தன் மகள் பிரேசியரை  கழட்டிக் கொண்டு வந்து அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ கொடுக்கும் போது அந்த பெத்த மனசு எப்படி அவமானத்தில்  துடித்திருக்கும்?!

ஒரு மந்திரியின் மகளையோ அல்லது எம்.எல்.ஏ.வின் மகளையோ இந்த தேர்வுத்துறை அதிகாரிகளால் ‘பிராவை கழட்டிட்டு வாம்மா!’ என்று சொல்லிவிட முடியுமா? சிவிலியனின் மார்பகம் என்ன அவ்வளவு மலிவா!