கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. பல மாநிலங்களும் கேரளாவுக்கு நிதியுதவிகளை அள்ளி வழங்கி வருகின்றன.

இந்நிலையயில் இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில், வெள்ளம் பாதித்துள்ள கேரள மாநிலத்தில் மீட்பு, நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு திட்டத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வயநாடு, எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் ரிலையன்ஸ் அறக்கட்டளை 15,000 பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமையல் பாத்திரங்கள், ரேஷன் பொருட்கள் போன்ற உதவிகளை வழங்கியது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் மூலம் ரெடிமேட் உணவு வகைகள், குளுகோஸ், சேனிட்டரி நாப்கின்கள், தற்காலிக தங்குமிடங்கள் போன்றவகைளை மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள 160 நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 2.6 டன்கள் எடை கொண்ட நிவாரண பொருட்கள் மகராஷ்டிர அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. இவை விமானம் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

7.5 லட்சம் எண்ணிக்கையிலான ஆடைகள், 1.5 லட்சம் காலணிகள், மளிகை பொருட்கள் வினியோகிக்கத் தயார் நிலையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வழங்கியுள்ள இந்த பொருட்களின் மதிப்பு மட்டுமே 50 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அறக்கட்டளை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலையாளம் பேசும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் கொண்ட தற்காலிக மருத்துவ மூகாம்கள் மூன்று மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு மருந்துகளும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கண்டறியப்பட்டு அவற்றை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் மறுசீரமைப்பு செய்து தரப்படும் என்றும் அறக்கட்டளையின் தலைவர் நீத்தா அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 71 கோடி ரூபாய் அளவுக்கு கேரளாவுக்கு உதவி செய்துள்ளன.