டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக பர்வேஷ் வர்மா தேர்வாகியுள்ளார். பாஜக தலைமை இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன் துணை முதல்வர் பதவிக்கு பர்வேஷ் வர்மா தேர்வாகி இருக்கிறார். நாளை முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
டெல்லி சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை கட்சியின் மத்திய பார்வையாளர்களாக பாஜக நியமித்திருந்தது. அவர்கள் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக ரேகா குப்தாவைத் தேர்ந்தெடுத்தனர்.
டெல்லி முதல்வர் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பாஜக தலைமை ஏற்கெனவே அறிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா, அஜய் மஹாவர், பர்வேஷ் வர்மா ஆகியோர் இடையே கடும் போட்டி இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், ஒரு பெண் முதல்வரை நியமிக்க பாஜக தலைமை விரும்புகிறது என்றும் அதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியிலும் பெரிய அளவு ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டது.
பெங்களூருவில் கூகிளின் பிரம்மாண்ட 'அனந்தா' வளாகம் திறப்பு
டெல்லியில் நான்காவது பெண் முதல்வர்:
இந்நிலையில், ரேகா குப்தா டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்பார் என பாஜக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாஜகவின் மறைந்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிஸ் கட்சியின் ஷீலா தீக்ஷித், ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோருக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் நான்காவது பெண் முதல்வர் என்ற பெருமையை ரேகா குப்தா பெறுகிறார்.
நடந்து முடிந்த 2025 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ரேகா குப்தா சாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை வீழ்த்தினார். மூன்று முறை எம்எல்ஏவாகத் தேர்வாகி இருந்த பந்தனா குமாரியை ரேகா குப்தா 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏவாகத் தேர்வானார்.
துணை முதல்வராகும் பர்வேஷ் வர்மா, புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தோற்கடித்தார். 2013, 2015, 2020ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த கெஜ்ரிவால், 2025 தேர்தலில் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 47 வயதான பர்வேஷ் வர்மா 30,088 வாக்குகளைப் பெற்று வாகை சூடினார்.
நாளை நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்படு வருகின்றன. டெல்லி முதல்வருடன் அமைச்சரவையில் இடம்பெறும் எல்லா அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து வெளியேற்றிய பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டும் கைப்பற்றியது.
