மும்பையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகினர். மழை ஓய்ந்து 3 நாளுக்கு பிறகே வெள்ளம் வடிந்து மும்பை நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

இந்நிலையில் நேற்று இரவு முதல் மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

சயான் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. புறநகர் பகுதியான தானேவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சுரங்கப்பாதைகள் மூழ்கின. சில இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையால் பால்கர் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கரையோர பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நாளை  வரை மிக கனமழை பெய்யும் என்பதால் புதிய ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என  வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.