கேரளாவில் கடந்த 8ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிகப்பட்டன. நேற்று மாலை நிலவரப்படி, மழை, வெள்ளத்துக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்தது. 

மாநிலம் முழுவதும் இன்னும் 40 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களில் தற்போது மழை குறைந்துள்ளதால் வெள்ளம் வடிந்து வருகிறது. அங்கு தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழை, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கேரள மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த மாவட்டங்களில் 41 பேர் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்துவிட்டனர். வயநாடு மாவட்டத்தில் உல்ள மெப்பாடி பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்.