நேற்று காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ. நாகராஜ் திடீரென மும்பை சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் அம்மாநிலச் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஈட்டுப்பட்டு வந்தனர். அவர்கள் முயற்சியின் விளைவாக ராஜினாமா கடிதம் அளித்த 16 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் மட்டும், தான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்க விரும்புவதாகவும் தன் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.டி.பி நாகராஜன் என்பவர் தான் தன் ராஜினாமா அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவரான டி.கே சிவகுமார் நேற்று காலை நாகராஜன் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் முடிவில்தான் தன் ராஜினாமா அறிவிப்பை நாகராஜன் திரும்ப பெற்றுவிட்டு காங்கிரஸ் கட்சியிலேயே தொடரப்போவதாகவும் உறுதியளித்திருந்தார்.

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ. நாகராஜ் திடீரென பாஜக தலைவர்களுடன் மும்பை சென்றுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.