வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதால் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இங்கு அடுத்த மாதம் 19-ம் தேதி இறுதிக்கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் இத்தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்காமல் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிட உள்ளதாக தகவல் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து, கேரளாவின் வயநாடு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி விரும்பினால் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக கூறினார். யார் வேட்பாளர் என்பதை, கட்சித் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். 
 
மேலும் உமாபாரதி தம்மைப் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, தனது குடும்பத்தினர் குறித்து பாஜகவினர் ஏதாவது குறைசொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள் என்றும், ஆனால் தங்களுடைய பணியை தாங்கள் செய்துகொண்டே இருப்போம் எனவும் தெரிவித்தார்.