கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சமூக பொருளாதார செயல்பாடுகள் அனைத்துமே முற்றிலுமாக முடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுதுமே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கால் நாடே முடங்கியுள்ள நிலையில், தொழில்முனைவோர், மாத ஊதிய ஊழியர்கள், தினக்கூலிகள் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிலையை பொதுமக்கள் சமாளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15%லிருந்து 4.4%ஆக குறைக்கப்படுகிறது. அதேபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.9% குறைக்கப்படுகிறது. இதனால் வீடு மற்றும் வாகனக்கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. 

தனிநபர் வாங்கிய அனைத்துவிதமான கடன்களுக்கான ஈ.எம்.ஐ-யையும் மூன்று மாதங்களுக்கு தனியார், பொதுத்துறை ஆகிய அனைத்து தரப்பு வங்கிகளும் தள்ளிவைக்கலாம். அந்த 3 மாத தவணை தொகையை பின்னர் செலுத்த அனுமதிக்கலாம். ரெப்போ ரேட் குறைக்கப்பட்டதால் வங்கிக்கடன் பெற்றொருக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க இயலும்.

தனி நபர் மட்டுமல்ல, நிறுவனங்களுக்கான வங்கிக்கடன் தவணனையையும் 3 மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது. 3 மாதங்களுக்கு பின்னர் இந்த 3 மாத தவணை தொகையை செலுத்த அனுமதிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பையும் இழப்பையும் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்துவருகிறது. அதற்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை எடுக்கும் என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.