குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 'ரெப்போ' வட்டி, 6 சதவீதமாக இருந்தது. அதன் பின், இருமுறை, தலா, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.5 சதவீதமாக அதிகரித்தது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ், கடந்த ஆண்டு, டிசம்பரில் பொறுப்பேற்றார். இந்தாண்டு பிப்ரவரியில், அவர் தலைமையில், முதன் முறையாக, நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அதில், 'ரெப்போ' வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. அடுத்து, ஏப்ரல் மாதத்தில், மீண்டும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.25 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 

ஜூலை 5-ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள். சில நிபுணர்கள், 0.25 முதல் 0.50 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 3-வது முறையாக ரெப்போ வட்டியை குறைத்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கான வட்டி விகிதமும் 6 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

வீடு வாகன வட்டி குறையும்

ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்டதன் மூலம் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் மீதான வட்டி வகிதம் குறைய வாய்ப்பாக அமைந்துள்ளது. நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 7.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. பணவீக்கம் முதல் காலாண்டில் 3 முதல் 3.1 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 3.4 முதல் 3.7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.