rawindra gaitwat
ஏர் இந்தியா நிறுவனத்தால், விமான பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட், வெவ்வேறு வழிகளில், விமான டிக்கெட் பெற முயன்றும் தொடர்ந்து அவருக்கு டிக்கெட் தர ஏர்.இந்தியா நிறுவனம் மறுத்து வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், அண்மையில் , ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்.
இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக, விமான நிறுவன ஊழியரை, ரவீந்திர கெய்க்வாட் 25 முறை செருப்பால் அடித்தார்.நாடு முழுவதம் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய ஏர்-இந்தியா விமான நிறுவனம் உட்பட 7 நிறுவனங்கள் தடை விதித்தன.ஆனால், கெய்க்வாட் விடாமல், தொடர்ந்து டிக்கெட் பெற, வெவ்வேறு வழிகளில் முயன்று வருகிறார்.
சில நாட்களுக்கு முன், மும்பையில் இருந்து, டில்லி செல்ல, அவரது உதவியாளர் மூலம் விமான டிக்கெட் பெற தொடர்பு கொண்டுள்ளார்; எனினும், ரவீந்திர கெய்க்வாட் பெயரை கேட்ட உடனேயே, ஊழியர்கள், 'டிக்கெட் வழங்க முடியாது' என தெரிவித்து விட்டனர்.
இதை தொடர்ந்து, ஐதராபாத்தில் இருந்து டில்லி செல்ல, பேராசிரியர் ரவீந்திர கெய்க்வாட் என்ற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்; ஆனால், ஏர் இந்தியா ஊழியர்கள், அதை பரிசீலனை செய்தபோது, டிக்கெட்டை ரத்து செய்து விட்டனர்.
மூன்றாம் முறையாக, நாக்பூரில் இருந்து டில்லி செல்ல, ஏஜண்ட்டுகள் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்; அப்போதும், 'ரவீந்திர கெய்க்வாட் என்ற பெயருக்கு டிக்கெட் கிடைக்காது' என ஏஜன்டுகள் தெரிவித்து உள்ளனர்.
இப்படி கடந்த 7 நாட்களில் மட்டும் 6 முறை விமான டிக்கெட்டுக்கு முயற்சித்தும் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் நொந்துபோன ரவீந்திர கெய்க்வாட் பேசாமல் அந்த ஊழியரிடம் மன்னிப்புக் கேட்டுவிடலாமா என யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
