அம்பேத்கர் நவோதயா வித்யாலயாக்கள்: கல்வி அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!
அம்பேத்கர் நவோதயா வித்யாலயாக்கள் அமைப்பதாகச் சொன்ன உறுதிமொழியை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, ரவிக்குமார் எம்.பி., கடிதம் எழுதியுள்ளார்
அம்பேத்கர் நவோதயா வித்யாலயாக்கள் நாடு முழுவதும் அமைக்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு, அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் உறுதிமொழி அளித்தார். அது அரசாங்கத்தின் உறுதிமொழியாக (assurance) அட்டவணைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு உறுதிமொழி அளிக்கப்பட்டால் அது நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு மக்களவையில் அளித்த உறுதிமொழியை இதுவரை நிறைவேற்றவில்லை.
இதனை சுட்டிக்காட்டி அம்பேத்கர் நவோதயா வித்யாலயாக்கள் அமைப்பதாகச் சொன்ன உறுதிமொழியை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் ரவிக்குமார் எம்.பி கூறியிருப்பதாவது: “மக்களவையில் நீங்கள் அளித்த உறுதிமொழி தொடர்பான மிக முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
மார்ச் 16, 2020 அன்று, நாடாளுமன்ற அமர்வின் போது, கணிசமான பட்டியலின ( SC) மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில், பட்டியலின மாணவர்களுக்கென பிரத்யேகமாக அம்பேத்கர் நவோதயா வித்யாலயாக்கள் அமைப்பது குறித்த கேள்வியை நான் எழுப்பினேன். அதற்கு நீங்கள் அளித்த பதிலில் பின்வருமாறு கூறினீர்கள்: "ஆம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், 'அம்பேத்கர் நவோதயா வித்யாலயா (ANV) என்ற புதிய திட்டத்தை, பட்டியல் சாதியினர் (SCs) செறிவாக வாழும் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. VI முதல் XII வரையிலான வகுப்புகள் கொண்டதாக அது இருக்கும். இது பட்டியலின (SC) மாணவர்களின் திறமையை ஊக்குவிப்பதையும், அவர்களின் வாழ்வில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அதிகரிக்கச் சிறந்த வாய்ப்புகளையும் வளங்களையும் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர் கல்விக்காக மற்ற மாணவர்களுடன் போட்டியிடுவதற்கும் சிறந்த தொழில் தேர்வு மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளுக்கும் இது வழிவகுக்கும்." எனத் தெரிவித்தீர்கள்.
இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, மக்களவையில் அளித்த இந்த முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் உங்களது அரசால் எடுக்கப்படவில்லை. நீங்கள் அவையில் அளித்த உறுதிமொழி (assurance) இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன: பிரதமர் மோடி பெருமிதம்!
அம்பேத்கர் நவோதயா வித்யாலயாக்கள் அமைப்பது எஸ்சி மாணவர்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்புக்கு மகத்தான முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. இனியும் தாமதிக்காமல் இந்த உறுதிமொழியை நிறைவேற்ற உடனடி மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தகுதியுள்ள பட்டியலின மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் இது அவசியம், இது அவர்களின் எதிர்கால வெற்றி மற்றும் சமமான வாய்ப்புகளுக்குப் பெருமளவில் பங்களிக்கும்.
தயவு செய்து இந்த விஷயத்தை உரிய அவசரத்துடன் பரிசீலித்து, இதை செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.